பூக்கடைகளுக்கு வைக்கப்பட்ட ‘சீலை’ ஒரு மணி நேரத்தில் அகற்ற வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

பூக்கடைகளுக்கு வைக்கப்பட்ட ‘சீலை’ ஒரு மணி நேரத்தில் அகற்றவேண்டும் என்று சி.எம்.டி.ஏ., மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-10-12 23:26 GMT
சென்னை,

சென்னை பத்ரியன் தெருவில் உள்ள பூக்கள் மொத்த விற்பனை கடைகளுக்கு 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். அதனடிப்படையில், பூ மொத்த வியாபாரிகள் அப்புறப்படுத்தப்பட்டு, 139 பூக்கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பூ வியாபாரிகள் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிரதன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, பூ மொத்த வியாபாரிகளைத் தான் அப்புறப்படுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் சில்லரை வியாபாரிகளையும் அதிகாரிகள் விரட்டுகின்றனர் என்று மனுதாரர்களின் வக்கீல்கள் வாதிட்டனர்.

உத்தரவுக்கு தடை

இதையடுத்து நீதிபதிகள், ‘மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்த நிலையில், அதிகாரிகள் எப்படி கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், ‘தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், பூக்கடை பகுதியில் உள்ள கடைகளுக்கு வைக்கப்பட்ட ‘சீலை’ ஒரு மணி நேரத்தில் அகற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும், ‘அந்த கடைகளில் பூ மொத்த வியாபாரம் செய்யக்கூடாது. தராசில் 2 கிலோவுக்கு மேல் எடை போடக்கூடாது. இந்த நிபந்தனையை பூ வியாபாரிகள் யாராவது மீறுவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சி.எம்.டி.ஏ.) மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுபிடித்து கூறினால், சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும்’ என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

உடனடியாக அகற்றம்

நீதிபதிகள் நேற்று மாலை 4 மணி அளவில் இந்த உத்தரவை பிறப்பித்தனர். இதையடுத்து அதிகாரிகள் கடைகளில் உள்ள ‘சீலை’ அகற்றிவிட்டு மாலை 5.30 மணிக்கு ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்