சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதில் திடீர் பிரச்சினை 2 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

Update: 2018-10-12 23:27 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு விமானங்கள் தரை இறங்குவதில் திடீர் பிரச்சினை ஏற்பட்டது. விமானங்கள் தரை இறங்கி நிற்பதற்கு போதிய நடைமேடைகள் (பே) இல்லாததால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமிட்டபடி பறந்தன.

இதையடுத்து மும்பையில் இருந்து 142 பயணிகளுடன் இரவு 11.05 மணிக்கு சென்னைக்கு வந்த விமானமும், கொல்கத்தாவில் இருந்து 134 பயணிகளுடன் இரவு 11.15 மணிக்கு வந்த விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

அதுபோல் டெல்லி, மதுரை, புவனேஸ்வர் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களும் தரை இறங்க முடியாமல் நீண்டநேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தரை இறங்கின. பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 2 விமானங்களும் நேற்று அதிகாலையில் மீண்டும் சென்னை திரும்பிவந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

மேலும் செய்திகள்