மணலி அருகே தொழிலாளி வெட்டிக்கொலை வாலிபர் கைது

மணலி அருகே, தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-12 23:37 GMT
திருவொற்றியூர், 

மணலி சின்ன சேக்காடு பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 55). இவர் எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6 மணி அளவில் கோபால், பக்கத்து தெருவில் உள்ள கடையில் செய்தித்தாள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

வீட்டு முன்பு வந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கோபாலின் தலையில் சரமாரியாக வெட்டினார். தலையின் பின்புறத்தில் பலத்த காயம் அடைந்த கோபால், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். உடனே மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபாலின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கோபாலை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோபால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி போலீசார், கொலையான கோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட கோபாலுக்கு மீனாட்சி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும், கோகிலா என்ற மகளும் உள்ளனர். கோகிலாவுக்கு திருமணமாகி விட்டது. பிரசவத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.

நேற்று கொலை நடந்தபோது கோபாலின் மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அவர்கள் கொலையுண்ட கோபாலின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

ஆள்மாறாட்டத்தில் கொலை

இந்த கொலை சம்பவம் குறித்து மணலி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அகஸ்டின் என்பவருடைய மகன் ராஜசேகர் (24) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கோபாலின் தம்பி முருகனுக்கும், அகஸ்டினுக்கும் ஒரு வீடு தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் முருகனை வெட்டிக்கொலை செய்து விடுவதாக ராஜசேகர் மிரட்டி வந்தார். அதன்படி முருகனை கொலை செய்ய வந்தபோது ஆள் மாறாட்டத்தில் அவரது அண்ணன் கோபாலை வெட்டிக்கொன்று விட்டதாக முதலில் தெரிவித்தார்.

போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, கோபால் அடிக்கடி தன்னிடம் தகராறு செய்து வந்தார். அந்த ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொலை செய்ததாக முன்னுக்குப்பின் முரணாக கூறினார். இதையடுத்து மணலி போலீசார் ராஜசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்