பூந்தமல்லி அருகே புதிதாக கட்டப்படும் விஜயகாந்த் வீட்டில் 2 பசு மாடுகள் திருட்டு

பூந்தமல்லி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் விஜயகாந்த் வீட்டில் வளர்த்து வந்த 2 பசுமாடுகளை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2018-10-12 23:42 GMT
பூந்தமல்லி, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், அட்கோ நகரில் புதிதாக பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அப்பாராவ் என்பவர் தனது மனைவியுடன் அங்கேயே தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். புதிதாக கட்டப்பட்டு வரும் அந்த வீட்டில் 3 பசுமாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைத்து பராமரிக்கும் வேலைகளையும் இவர் கள் பார்த்து வருகின்றனர்.

2 பசு மாடுகள் திருட்டு

வீடு கட்டுமான பணிகளை அடிக்கடி விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் இங்கு வந்து பார்த்து விட்டு செல்வார்கள் அப்போது இந்த பசுமாடுகளுக்கு அவர்களே உணவு அளித்துவிட்டு செல்வார்கள்.

நேற்று முன்தினம் இரவு 3 மாடுகளும் வீட்டின் முன் பகுதியில் கட்டப்பட்டு இருந்தன. அப்பாராவ், அவருடைய மனைவி இருவரும் தூங்கச்சென்று விட்டனர். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது 2 பசுமாடுகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எங்கு தேடியும் மாடுகளை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் அந்த பசுமாடுகளை திருடிச்சென்று இருப்பதாக தெரிகிறது.

கண்காணிப்பு கேமரா

இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில் வீட்டை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் உள்ளது. முன் பகுதியில் உள்ள இரும்புக்கதவு இரவு நேரங்களில் உள்பக்கமாக பூட்டியே இருக்கும்.

அதற்கு அருகில் உள்ள மற்றொரு சிறிய இரும்பு கதவு மட்டும் திறந்து இருக்கும். எனவே மாடுகள் அந்த இரும்புக்கதவு வழியாக அதுவாக வெளியே நடந்து சென்றனவா? அல்லது மர்மநபர்கள் 2 பசுமாடுகளையும் அந்த வழியாக திருடிச்சென்றார்களா? என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பூந்தமல்லி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்