மதிப்பெண் குறைவால் பெற்றோர் திட்டினர்: திருவாரூரில் மாயமான மாணவன் தஞ்சையில் மீட்பு

மதிப்பெண் குறைவால் பெற்றோர் திட்டியதால் திருவாரூரில் மாயமான மாணவனை தஞ்சையில் போலீசார் மீட்டனர்.

Update: 2018-10-13 22:45 GMT
தஞ்சாவூர்,

திருவாரூர் புதுத்தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர் நாகை மாவட்டம் புத்தகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஹரிவசந்த் (வயது 13). இவன் தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 11–ந் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஹரிவசந்த் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சசிகுமார், திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவனின் புகைப்படம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.


தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வரும் பத்மநாபன் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அவர், சிவப்பு நிற பனியன் அணிந்து கொண்டு சிறுவன் ஒருவன் தனியாக நடந்து வந்ததை பார்த்தார். ஏற்கனவே ஹரிவசந்த் புகைப்படத்தை பத்மநாபன் பார்த்து இருந்ததால், அந்த சிறுவனை ஆட்டோ டிரைவர் உதவியுடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பின்னர் அவனிடம் விசாரித்தபோது, காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் என்னை பெற்றோர் திட்டினர். இதனால் கோபித்து கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்றேன். அங்கிருந்து தஞ்சைக்கு பஸ்சில் வந்தேன். இங்கு பெரியகோவிலை சுற்றி பார்த்து விட்டு நடந்து வந்து கொண்டிருந்தேன் என்று கூறினான். இதையடுத்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே தஞ்சைக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களிடம் ஹரிவசந்தை போலீசார் ஒப்படைத்தனர். மகன் கிடைத்த மகிழ்ச்சியில் போலீசாருக்கு நன்றி சொல்லிவிட்டு அவனை தங்களுடன் பெற்றோர் அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்