தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்காத அதிகாரிகளுக்கு அபராதம் - மாநில ஆணையர் செல்வராஜ் தகவல்

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உரிய பதில் அளிக்காத அதிகாரிகளுக்கு அபராதம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.

Update: 2018-10-13 22:30 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் வருகை தந்து நிலுவையில் உள்ள தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கோரும் மனுக்களை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பொதுதகவல் அலுவலர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:– மத்திய அரசு கடந்த 2005–ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வந்து மத்திய–மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வழிவகை செய்துள்ளது. தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறும் செயல் ஆகும். இந்த சட்டத்தின்கீழ் ஒவ்வொரு அலுவலகத்திலும் நியமிக்கப்பட்டுள்ள பொது தகவல் அதிகாரி 30 நாட்களுக்குள் உரிய பதிலை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.

அவர் 30 நாட்களுக்கு தகவல் அளிக்கவில்லை என்றாலோ, அவர் அளித்த தகவல் திருப்தி இல்லை என்றாலோ அந்த துறை மேல்அதிகாரி மேல்முறையீடு செய்து அவர் 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அவர் பதிலளிக்கவில்லை என்றால் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

நாங்கள் உரிய பதில் பெற்றுத்தருவதோடு, பதில் அளிக்காத அதிகாரிகளுக்கு காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 வீதம் அதிகபட்சமாக ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பொது தகவல் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை, பதவி உயர்வு ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தற்போது ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் பதில் தராமல் நிலுவையில் உள்ள 20 மனுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் குறித்து விசாரித்து அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து பதில் அளிக்கப்பட்டுள்ளது. உரிய பதில் அளிக்காத ராமநாதபுரம் நுகர்பொருள் வாணிப கழக பொது தகவல் அதிகாரி மீது அபராதம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுஉள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்