துப்பாக்கி சூடு சம்பவம்: தூத்துக்குடியில் சி.பி.ஐ. விசாரணை போலீஸ் நிலையங்களில் ஆவணங்கள் சேகரித்தனர்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆவணங்கள் சேகரித்தனர்.

Update: 2018-10-13 21:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஆவணங்கள் சேகரித்தனர்.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 99 போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக சிப்காட், தென்பாகம், வடபாகம், முத்தையாபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தமிழக அரசு மாற்றியது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வந்தனர். இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி ஐகோர்ட்டு ஆணை பிறப்பித்தது.

சி.பி.ஐ. விசாரணை

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை கடந்த 8-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் சென்னை சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ரவி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்தார். சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

தூத்துக்குடியில்...

இந்த நிலையில் சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் வழக்கு விசாரணை அதிகாரியான சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு ரவி மற்றும் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.

முதல்கட்டமாக அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர். தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்த பின்னர், அடுத்தக்கட்ட நடவடிக்கையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்