ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வினர் பதவி விலகினார்களா? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

‘ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தி.மு.க.வினர் பதவி விலகினார்களா?’ என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

Update: 2018-10-13 23:00 GMT

கோவை,

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்றுக்காலை விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர். ஆகவே அவர்கள் சட்ட ரீதியாக அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் அது விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றச்சாட்டு வந்ததினால் பதவி விலக வேண்டும் என்று சில பேர் சொல்வது தவறு.

தி.மு.க. போன்ற கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து ஆட்சியில் இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டு வந்தது. அப்போது அவர்கள் பதவி விலகினார்களா? இல்லையே. எனவே ஊழல் குற்றச்சாட்டு மற்றும் ஊழல் எந்த விதத்திலும் ஓப்புக்கொள்ள முடியாத ஒன்று. அது நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும். சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். துணைவேந்தர்கள் நியமனத்தில் எழுந்துள்ள ஊழல்கள் குறித்து கவர்னர் மறுக்கவில்லை. கல்வியாளர்களை சந்தித்தபோது தான் எனக்கு இப்படிபட்ட தகவல்கள் கிடைத்தது என்று தான் கூறினார். ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கவர்னர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்