மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 3 பேர் கைது பெண்கள் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு

மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-10-13 22:15 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே காருகுடி நண்டலாற்று பாலத்தில் பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பெண்ணுடன் வந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது, அந்த பெண் நைசாக தப்பி ஓடிவிட்டார். அவர்கள் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த வாலிபர், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நடேசன் மகன் மதியழகன் (வயது 32) என்பதும், தப்பி ஓடியவர் அவருடைய மனைவி ஜெயந்தி என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூரை சேர்ந்த செல்வராஜ் மகன் கடுகு என்பவரும் தப்பி ஓடிவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தெடர்பாக மதியழகன் மனைவி ஜெயந்தி, கடுகு ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதேபோல் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த மயிலாடுதுறை அருகே கேசிங்கன் வடக்கு தெருவை சேர்ந்த முத்தையன் மகன் சரவணன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின்போது தப்பியோடிய சரவணன் மனைவி ஜான்சிராணி, வடமட்டம் கிராமத்தை சேர்ந்த கவி ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த காரைக்கால் கோவில்பத்து அன்பு நகரை சேர்ந்த பீட்டர் மகன் பாபிலோன் (20) என்பவரையும் கைது செய்தனர். இவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது பாபிலோனுடன் வந்து தப்பி ஓடிய அவரது தாய் ஆரோக்கிய அருள்செல்வி, காரைக்கால் நெடுங்காடு பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்