சமூக பொறுப்புணர்வு நிதி பெறுவதில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் முறைகேடு - முதல் அமைச்சர் நாராயணசாமி பேட்டி

சமூக பொறுப்புணர்வு நிதி பெறுவதில் கவர்னர் மாளிகை ஊழியர்கள் முறைகேடு செய்து இருப்பதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-10-13 23:15 GMT
புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இருந்து புதுச்சேரி வளர்ச்சிக்காக சமூக பொறுப்புணர்வு நிதி பெறுவதற்கு அரசின் சார்பில் சி.எஸ்.ஆர். குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தலைவராக முதல்-அமைச்சர் உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளுக்கு தேவையான எந்திரங்கள் வாங்குவதற்கும், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், கழிப்பறைகள் கட்டுவதற்கும் பல தொண்டு நிறுவனங்களும், வங்கிகளும் முன்வந்து நிதி வழங்குவது வழக்கம்.

சி.எஸ்.ஆர். கமிட்டி மூலமாக அந்த நிதியை பெற்று அந்தந்த துறைகளின் திட்டங்களுக்காக நிதிகளை வழங்கி வருகிறோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய எந்திரம் வாங்குவதற்கு இந்தியன் வங்கி சார்பில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை கொடுத்தனர். இப்படி பல நிறுவனங்களிலிருந்து நிதி பெறப்பட்டு முறையாக, வெளிப்படையாக செலவு செய்யப்படுகிறது.

சி.எஸ்.ஆர். நிதி சம்பந்தமாக தலைவர் மற்றும் அதற்கான விதிமுறைகள் இருக்கும்போது கவர்னர் அலுவலகத்தில் இருந்து பல நிறுவனங்கள், ரோட்டரி கிளப்புகளை நேரடியாக தொடர்பு கொண்டு சி.எஸ்.ஆர். நிதி கேட்டு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவல்படி இதுவரை ரூ.85 லட்சம் வசூல் செய்திருக்கிறார்கள். அந்த நிதி யார், யாரிடமிருந்து வசூல் செய்யப்பட்டது என்ற விவரம் இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை.

எதற்கெடுத்தாலும், வெளிப்படையான நிர்வாகம், ஊழலில்லாத நிர்வாகம் என்று கவர்னர் கூறி வருகிறார். ஆனால் சி.எஸ்.ஆர். நிதி செலவில் வெளிப்படைத்தன்மை இல்லை. அந்த நிதியை சி.எஸ்.ஆர். கமிட்டிக்கு அனுப்ப வேண்டுமே தவிர கவர்னர் மாளிகை அலுவலகத்திற்கு செலவு செய்ய அதிகாரம் கிடையாது. இதில் முறைகேடு நடந்துள்ளது.

கவர்னர் அலுவலகத்தின் பெயரை சொல்லி பலர் சி.எஸ்.ஆர். நிதி வசூல் செய்திருக்கிறார்கள். இது அதிகார துஷ்பிரயோகம். கவர்னர் அலுவலகமே ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறது. குறிப்பாக, கவர்னர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக சி.எஸ்.ஆர். என்ற பெயரில் பணத்தை வசூல் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கு கவர்னர் பொறுப்பு ஏற்க வேண்டும். அதிகாரம் இல்லாமல் கவர்னர் சி.எஸ்.ஆர். நிதியை வசூல் செய்துள்ளார். இது சம்பந்தமாக சி.எஸ்.ஆர். கமிட்டிக்கு யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள், எவ்வளவு செலவு செய்யப்பட்டது, எதற்கு செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தை கவர்னர் அளிக்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும் விதிமுறையை பற்றி பேசுகிற கவர்னர், சி.எஸ்.ஆர். கமிட்டி குறித்த விதிமுறையை மறந்ததற்கு காரணம் என்ன? பலர் என்னிடம் நேரடியாக வந்து கவர்னர் மாளிகை மூலம் தொலைபேசியில் சி.எஸ்.ஆர். நிதி கேட்டு தொந்தரவு கொடுப்பதாக புகார் அளிக்கின்றனர். இவ்வாறு பணம் வசூலிக்க கவர்னர் மாளிகையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கவர்னர் ஏதாவது உத்தரவிட்டாரா? என்பது தெரிய வேண்டும். இதற்கு கவர்னர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கின்றேன்.

மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைத்தாலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87க்கும், புதுச்சேரியில் ரூ.84க்கும் விற்கப்படுகிறது. புதுச்சேரியில் குறைவாக இருப்பதற்கு காரணம் தமிழகத்தைவிட வாட் வரி குறைவாக இருப்பதுதான்.

இந்த விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு எதைப்பற்றியும் கவலைப் படாமல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கொடுத்து வந்த மானியத்தை ரத்து செய்ததால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு கலால் வரியை அதிகமாக விதிப்பதால் தான் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு டாலர் மதிப்பு ரூ.58ல் இருந்து ரூ.60க்குள் இருந்தது. ஆனால் தற்போது ஒரு டாலர் ரூ.75க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

மத்திய அரசு தொடர்ந்து பொருளாதார சீர்கேட்டில் இறங்கி இருப்பதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் வராக்கடன்கள் ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. வங்கிகள் அந்த கடனை வசூல் செய்ய முடியாத சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நான் ஊழலில் ஈடுபட மாட்டேன். யார் ஊழல் செய்தாலும் விட்டு வைக்க மாட்டேன் என்றார். ஆனால், இன்று ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக எந்தவித பதிலும் கூறாமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து விமானத்தை வாங்கும் போது அதனை பராமரிப்பதற்கு அந்த நாட்டுடன் காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது அதனை பிரதமர் மோடி ரத்து செய்து பராமரிக்கும் பணியை அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு மாற்றியுள்ளார். ஒப்பந்தம் செய்த பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர், இந்தியா தலையிட்ட காரணத்தால் தான் அனில் அம்பானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இதனால் நமது நாட்டிற்கு ரூ.41 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகாருக்கு இந்திய அரசு தரப்பில் எந்த பதில் இல்லை. இந்த ஊழல் சம்பந்தமாக பாராளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. இதனை பாராளுமன்ற நிலைக்குழு ஏற்கவில்லை. இந்த பிரச்சினை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பூதாகரமாக உருவெடுக்கும்.

புதுச்சேரி மாநிலத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். எனவே ஜல்லிக்கட்டு நடத்துவது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. விதிமுறைக்கு உட்பட்டு புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த பொங்கல் பண்டிகையின் போது அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்