தடையை மீறி கோவிலில் வழிபாடு: கிராம மக்கள் திடீர் சாலைமறியல் அஞ்செட்டி அருகே பரபரப்பு

அஞ்செட்டி அருகே தடையை மீறி கோவிலில் வழிபாடு நடத்தியவர்களை கண்டித்து கிராம மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-13 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ளது பத்தேகவுண்டனூர், ஜீவாநகர். இந்த 2 ஊர் மக்களுக்கும் பொதுவான முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 2 ஊர் பொதுமக்களும் பூஜை செய்து சாமியை வழிபட்டு வந்தனர். கோவிலை புதுப்பிக்கும் பணியின் போது இரு கிராம மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. மேலும் வழிபாடு செய்வதிலும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த பிரச்சினை குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 2 கிராம மக்களையும் தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன் அழைத்தார். ஆனால் ஜீவாநகர் பொதுமக்கள் வரவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஜீவாநகரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தடையை மீறி கோவிலுக்குள் நுழைந்து பூஜை செய்து வழிபாடு நடத்தியதாக தெரிகிறது.

இது குறித்து அறிந்த பத்தேகவுண்டனூர் கிராம மக்கள் அதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள அஞ்செட்டி-ஒகேனக்கல் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கோவிலை தங்கள் கட்டுபாட்டில் விட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில் தகராறு தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் கோவிலுக்குள் யாரும் செல்லக்கூடாது எனவும், மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்