மண்டியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்லாத பா.ஜனதா வேட்பாளர்

மண்டியா நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பிரசாரத்திற்கு செல்லவில்லை. இதனால் அவரை காணவில்லை என போலீசில் புகார் அளிக்க கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

Update: 2018-10-13 22:00 GMT
பெங்களூரு, 

மண்டியா நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பிரசாரத்திற்கு செல்லவில்லை. இதனால் அவரை காணவில்லை என போலீசில் புகார் அளிக்க கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

பா.ஜனதா வேட்பாளர்

கர்நாடகத்தில் காலியாக உள்ள சிவமொக்கா, பெலகாவி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மண்டியா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டசபை தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி பலமாக உள்ளது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 8 தொகுதிகளையும் ஜனதாதளம் (எஸ்) கட்சியே கைப்பற்றியுள்ளது. இதனால் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது.

அதுபோல் மண்டியா நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளராக சித்தராமையா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பிரசாரம் செய்ய ஆர்வம்காட்டவில்லை. இதனால் சித்தராமையா, பா.ஜனதா வேட்பாளராக அறிவித்து 3 நாட்கள் ஆகியும் மண்டியா தொகுதியில் பிரசாரம் செய்ய வரவில்லை என்று உள்ளூர் கட்சி பிரமுகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். மேலும் வேட்பாளரே பிரசாரத்திற்கு வரவில்லை என்றால், மக்களிடம் எப்படி வாக்கு சேகரிப்பது என்றும் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

போலீசில் புகார் அளிக்க முடிவு

இதுகுறித்து பா.ஜனதா பிரமுகரான சித்தராஜு கூறுகையில், பா.ஜனதா சார்பில் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இதுவரை பிரசாரத்திற்கு வரவில்லை. அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால், அணைத்துவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வருகிறது. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அவர் எப்போது பிரசாரத்திற்கு வருவார் என காத்திருக்கிறோம். மண்டியா தொகுதியை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தியிருந்தால் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு இருக்காது. அவர் தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லையெனில், அவரை கண்டுபிடித்து தரும்படி மண்டியா மாவட்ட பா.ஜனதாவினர் போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனதாதளம் (எஸ்) வெற்றிபெறுவது எளிது

மண்டியா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெறுவது எளிது என்றும், இதனால் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சித்தராமையா பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டாமல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்