சென்னையில் டெங்கு காய்ச்சல் மேலாண்மை கருத்தரங்கு அமைச்சர் தொடங்கி வைத்தார்

எழும்பூர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை பயிற்சி நிலையத்தில் டெங்கு காய்ச்சல் மேலாண்மை கருத்தரங்கு நடந்தது.

Update: 2018-10-13 23:00 GMT
சென்னை, 

சென்னை எழும்பூர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை பயிற்சி நிலையத்தில் டெங்கு காய்ச்சல் மேலாண்மை குறித்த 2 நாள் கருத்தரங்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மேலும் டெங்கு மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையில், இந்திய மருத்துவ முறை பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர் அரசு ஆஸ்பத்திரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அனைத்து பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே தாமதமில்லாமல் அரசு ஆஸ்பத்திரிகளை அணுக வேண்டும். டாக்டர் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலான துரித செயல்பாட்டுக் குழு இயங்கி வருகிறது. மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த பகுதியில் காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை உடனே முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தி செய்யும் இடங்களான பழைய டயர், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற தேவையற்ற பொருட்கள் தேங்காமல் அப்புறப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்