விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு கத்திக்குத்து நகர செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

திருத்துறைப்பூண்டியில் நடந்த தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அக்கட்சியின் நகர செயலாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2018-10-14 22:15 GMT
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35). இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி செயலாளர் ஆவார்.

அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி நடைபெற உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் மாநாட்டுக்காக திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக இவருடைய தரப்புக்கும், அதே கட்சியின் நகர செயலாளர் திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் கீழத்தெருவை சேர்ந்த மைக்கேல் (32) என்பவருடைய தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறின்போது பிரகாசுக்கு கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த பிரகாசை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், குணா ஆகியோர் மைக்கேல் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதனிடையே தன்னை பிரகாஷ் உள்பட 3 பேர் தாக்கியதாக நகர செயலாளர் மைக்கேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்