கல்லூரி மாணவரை தாக்கி செல்போன் பறிப்பு: சிறுவன் உள்பட 2 பேர் கைது

கோவையில் கல்லூரி மாணவரை தாக்கி செல்போன்கள், மோட்டார் சைக்கிள் பறித்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-14 21:30 GMT
கோவை, 

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மகன் ஸ்ரீநாத் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீநாத் கோவை குனியமுத்தூரை சேர்ந்த அனீபா என்பவர் மகன் அன்சித்தை (21) சந்தித்து தனது செல்போன்களை விற்பனை செய்யப்போவதாக தெரிவித்து உள்ளார்.இதனை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி ஸ்ரீநாத் சுங்கம் அருகே அன்சித்தை வரும்படி கூறியுள்ளார். இருவரும் சுங்கம் அருகே பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஸ்ரீநாத்தை தாக்கி, மிரட்டி அவரிடம் இருந்த 2 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுகுறித்து ஸ்ரீநாத் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு அன்சித் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அன்சித் தன் நண்பர்களை வரவழைத்து ஸ்ரீநாத்திடம் இருந்து செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அன்சித், அவருக்கு உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

கோவை பொன்னையாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அபிஷேக் (18). ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது வெறைட்டி ஹால் ரோட்டில் 2 நபர்கள் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெறைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீஸ் விசாரணையில் தியாகிகுமரன் வீதியை சேர்ந்த பிரகாஷ் (19), மானாமதுரையை சேர்ந்த ராஜகோபால் ஆகியோர் அபிஷேக்கை மிரட்டி செல்போன், மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றது தெரிந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை மீட்டனர்.

மேலும் செய்திகள்