கவர்னரிடம் காசோலை வழங்கிய விவகாரம்: முதல்–அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு செல்வகணபதி எம்.எல்.ஏ. விளக்கம்

கவர்னரிடம் காசோலை வழங்கிய விவகாரம் குறித்த முதல்–அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு செல்வகணபதி எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2018-10-15 23:00 GMT

திருக்கனூர்,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து திருக்கனூர் பெரிய ஏரிக்கு வரும் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. செல்வகணபதி நேற்று மாலை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கவர்னர் தன்னிச்சையாக நிதி வசூல் செய்து முறைகேடு செய்வதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றஞ்சாட்டினார். மேலும் நான், கவர்னரிடம் காசோலை அளித்திருப்பதாகவும், என்னிடம் எவ்வாறு கவர்னர் காசோலை பெறலாம் என்றும் நாராயணசாமி கூறியிருக்கிறார்.

கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு விழாவில் என்னுடைய எம்.எல்.ஏ. சம்பளத்தில் இருந்து மக்கள் பணிக்கு செலவிடுவதாக தெரிவித்திருந்தேன். அதற்கு கவர்னர் என்னை பாராட்டினார். அதன்படி திருக்கனூர் பெரிய ஏரி வாய்க்கால் தூர்வாரும் பணிக்காக என்னுடைய சம்பளத்தில் ரூ.1,28,150 செலவு செய்யப்போவதாகவும், அதற்கான காசோலையை ஒப்பந்தகாரரிடம் வழங்குவதாகவும் தெரிவித்தேன்.

ஒப்பந்தகாரருக்கு வழங்குவதற்கு வைத்திருந்த காசோலையை பெரிய அளவில் ஜெராக்ஸ் எடுத்து புகைப்படத்துக்காக கவர்னரிடம் வழங்கினேன். ஆனால் அசல் காசோலை என்னிடமே உள்ளது. கவர்னரிடம் அதை வழங்கவில்லை. தற்போது அந்த பணிகளை நேரில் பார்வையிட வந்துள்ளேன். பணி முடிந்ததும் அந்த காசோலையை ஒப்பந்தக்காரரிடம் நானே நேரடியாக வழங்குவேன்.

கவர்னர் யாரிடமும் பணமோ, காசோலையோ வாங்கவில்லை. மக்கள் நலத்திட்ட பணிகளுக்கான நிதியை நன்கொடையாளர்களே ஒப்பந்தக்காரரிடம் நேரடியாக வழங்குகின்றனர். முதல்–அமைச்சர் செய்ய முடியாத பணிகளை கவர்னர் செய்து வருகிறார். நீர்நிலைகளை பாதுகாக்க கவர்னர் பாடுபட்டு வருகிறார். கவர்னர் குறித்து முதல்–அமைச்சர் தவறான கருத்தை பரப்பி வருகிறார்.

மக்கள் நலனுக்காகவும் புதுவையின் வளர்ச்சிக்காகவும் கவர்னருடன் முதல்–அமைச்சர் இணைந்து பணியாற்றவேண்டும்.

இவ்வாறு செல்வகணபதி எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்