சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-10-15 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ளது காடுஉத்தனப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் திம்மப்பா (வயது 65). கூலித்தொழிலாளி. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் அதே ஊரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி திம்மப்பாவை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட திம்மப்பாவிற்கு சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறையும், அதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டிய குற்றத்திற்காக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார். 

மேலும் செய்திகள்