மதுரை ரவுடி கொலை: நிலக்கோட்டை கோர்ட்டில் 4 பேர் சரண்

மதுரையில் ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர், நிலக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்தனர்.

Update: 2018-10-16 21:45 GMT
நிலக்கோட்டை, 

மதுரை மாவட்டம், செல்லூர் கைலாசபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 26). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலில் உள்ள இவர், ஒரு வழக்கு தொடர்பாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அசோக்குமாரும் அப்பகுதியை சேர்ந்த ரவுடி செந்தமிழ்செல்வமும் (24) நண்பர்கள். அசோக்குமாரை அவரது நண்பர்கள் அந்த பகுதியில் கொள்ளையடிக்க அழைத்துள்ளனர். ஆனால் அவர்களுடன் செல்லாமல், தான் திருந்தி வாழ முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே செந்தமிழ்செல்வத்தின் தந்தை மாரிமுத்துவை வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அவரை அழைத்து வருவதற்காக அசோக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு வரும்படி நண்பர்கள் அழைத்துள்ளனர். ஆனால் போலீஸ் நிலையத்திற்கு வர அவர் மறுத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கடந்த 14-ந்தேதி இரவு அசோக்குமார் வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் செந்தமிழ்செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் விஜய் (23), கார்த்திக் (24), சசிக்குமார் (23) ஆகிய 4 பேர் அங்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் அசோக்குமாரை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலை நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செந்தமிழ்செல்வம் உள்பட 4 பேரும் சரண் அடைந்தனர். மாஜிஸ்திரேட்டு ரிஸ்னா பர்வீன், அவர்கள் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க செல்லூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்