அ.தி.மு.க. பிரமுகர் நிறுவனங்களில் விடிய, விடிய நடந்த வருமான வரி சோதனை முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்

மன்னார்குடியில் அ.தி.மு.க. பிரமுகரின் நிறுவனங்களில் விடிய, விடிய வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் 3 அட்டை பெட்டிகளில் பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.

Update: 2018-10-16 23:00 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் மனோகரன். இவர் மன்னார்குடியை அடுத்த சேரன்குளம் ஊராட்சி முன்னாள் தலைவராக இருந்தார். தற்போது சேரன்குளம் ஊராட்சி அ.தி.மு.க. கிளை செயலாளராகவும், முதல்நிலை ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இவரது அலுவலகம், லாட்ஜ், திருமண மண்டபம் உள்பட பல்வேறு நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்தது.

இதற்காக நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் திருச்சி, தஞ்சை, கும்பகோணம் மற்றும் நாகையில் இருந்து 6-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 25-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சி வருமான வரித்துறை உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் வந்தனர்.

முதலில் மன்னார்குடி மீனாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள மனோகரனின் வீட்டுக்கு சோதனை நடத்துவதற்காக சென்றனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு சோதனை நடத்தாமல் அங்கிருந்து புறப்பட்டு கீழராஜ வீதியில் உள்ள லாட்ஜ்க்கு சென்று அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் மனோகரனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் மற்றும் கம்மாள தெருவில் உள்ள அவரது அலுவலகம், நீடாமங்கலத்தில் உள்ள கான்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனம், தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூரில் உள்ள திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும் ஒரே நேரத்தில் இந்த அதிரடி சோதனை தொடங்கியது. இந்த சோதனையின்போது லாட்ஜ், திருமண மண்டபம், அலுவலகம், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

நேற்று முன்தினம் காலையில் தொடங்கிய இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்து உள்ளது. நேற்று காலை 9.30 மணிக்கு தங்களது சோதனையை முடித்துக்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது கிடைத்த பல்வேறு முக்கிய ஆவணங்களை 3 அட்டை பெட்டிகளில் எடுத்துக்கொண்டு தாங்கள் வந்த கார்களில் ஏற்றிச் சென்றனர்.

இதற்கிடையில் மன்னார்குடி மேலராஜ வீதியில் உள்ள மனோகரனின் தொழில் கணக்குகளை பார்த்து வந்த ஆடிட்டர் அய்யப்பன் என்பவரின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை 4.30 வரை வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அய்யப்பனிடம், மனோகரன் தொழில் சம்பந்தபட்ட கணக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்த கம்ப்யூட்டர்களில் இருந்த மனோகரனின் வரவு-செலவு கணக்குகள் விபரத்தை தாங்கள் கொண்டு வந்திருந்த பென் டிரைவ்களில் பதிவு செய்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

மன்னார்குடி அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் விடிய, விடிய நடந்த வருமான வரித்துறை சோதனை இந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்