பாலிசி தவணைத்தொகையை வேறு பெயரில் வரவு வைத்த வழக்கு: பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

பாலிசி தவணைத்தொகையை வேறு பெயரில் வரவு வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தஞ்சை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-10-16 22:15 GMT
தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கொரநாடு வாத்துக்காரத்தெருவை சேர்ந்தவர் மரியபிரகாசம். இவருடைய மகள் கிரேசி. இவர் தஞ்சை மேலவீதியில் உள்ள பஜாஜ் அலையன்ஸ் லைப்இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்து இருந்தார். ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்து 749 வீதம் 15 வருடங்களுக்கு தவணைத்தொகை கட்ட வேண்டும்.

முதல் 5 ஆண்டுகள் நிலுவை இல்லாமல் தவணைத் தொகையை செலுத்தி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரேசி தவணை தொகை செலுத்திய போது அது கேரளாவில் உள்ள கிரேசி என்பவரின் பெயரில் வரவு வைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கிரேசிக்கு மணிபேக் பாலிசி மூலமாக வர வேண்டிய ரூ.23 ஆயிரத்து 643-ம் கேரளாவை சேர்ந்த கிரேசிக்கு, காசோலை மூலம் அனுப்பப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து கும்பகோணம் கிளை அலுவலகம் மற்றும் தஞ்சையில் உள்ள அலுவலகத்தில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது குறித்து கிரேசி தஞ்சையில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவர் முகமதுஅலி மற்றும் உறுப்பினர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்து பாலிசி நிறுவனம் கிரேசி செலுத்திய ரூ.10 ஆயிரத்து 780-ஐ அவரது பெயரில் ரசீது வழங்கவும், போனஸ்தொகை ரூ.23 ஆயிரத்து 643 வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் பாலிசி காலாவதியாகக்கூடாது என்றும், சேவை குறைபாட்டிறக்காக ரூ.5 லட்சம் இழப்பீடும், செலவுத்தொகையாக ரூ. 5 ஆயிரம் கொடுக்கவும் என்று உத்தரவிட்டார்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு கல்யாணபுரம் முதல் சேத்தியை சேர்ந்தவர் சேக்அலாவுதீன். இவருடைய மனைவிக்கு புற்றுநோய் இருந்தது. இதை அறிந்த தஞ்சை தெற்கு வீதியில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி ஊழியர் எழிலன் என்பவர், சேக்அலாவுதீனை அணுகி, மருத்துவகாப்பீட்டு திட்டத்தில் இணைத்துள்ளார். இதற்காக ரூ.25 ஆயிரத்தையும் சேக்அலாவுதீன் செலுத்தி உள்ளார். இந்த தவணைத்தொகை முறையாக வைப்பீடு செய்யவில்லை. இது குறித்து எழிலனை கேட்ட போது அவர் தவறு செய்து விட்டதாகவும், இனி இது நடக்காது என கூறி அடுத்த தவணைத்தொகை ரூ.40 ஆயிரத்தையும் வாங்கி ஏமாற்றி உள்ளார்.

இது குறித்து சேக்அலாவுதீன் தஞ்சை நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை தலைவர் முகமதுஅலி, உறுப்பினர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்து சேக்அலாவுதீனிடம் இருந்து பெற்ற தவணைத்தொகை ரூ.24 ஆயிரம் மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொடுக்க வேண்டும். மேலும் இழப்பீடு மற்றும் செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்