போலீஸ் பாதுகாப்புடன் கூட்டுறவு சங்க தேர்தல் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

அறந்தாங்கியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-16 23:00 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்க 11 இயக்குனர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 16 பேர் போட்டியிட்டனர். காலை 7 முதல் தேர்தல் தொடங்கியதில் பாதுகாப்பு கருதி அங்கே அங்கே போலீசார் பேரிகாடு அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் பஸ் போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டது. பஸ்சில் வந்த மாணவ-மாணவிகள் பொதுமக்கள் பஸ்சை விட்டு இறங்கி பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர். இதனால் அறந்தாங்கி நகரமே போக்குவரத்தில் சிக்கி தவித்தது. அதன் பிறகு போலீசார் வந்து போக்குவரத்து சிக்கலை சரிசெய்தனர். இந்த போக்குவரத்து சிக்கலில் இரண்டு தனியார் பள்ளி வேன்களின் கண்ணாடிகள் உடைந்தது.

அறந்தாங்கியில் நேற்று சந்தை என்பதால் வர்த்தகம் செய்ய வந்தவர்களும், பொருட்கள் வாங்க வந்தவர்களும் அவதிப்பட்டு சென்றனர். தேர்தல் நடந்ததையொட்டி பட்டுகோட்டை சாலையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. வாக்குசாவடி அருகே தேர்தல் வேட்பாளர்கள் வாக்கு செலுத்த வந்தவர்களிடம் அ.தி.மு.க.வினருக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

தேர்தலையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அறந்தாங்கி நகர கூட்டுறவு சங்க கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) காலை வாக்கு எண்ணும் பணி நடக்கிறது.

மேலும் செய்திகள்