புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

Update: 2018-10-16 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதேபோல நேற்று காலையில் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளாக திலகர் திடல், தற்காலிக பஸ் நிலையம், பொது அலுவலக வளாகம், பால்பண்ணை ரவுண்டானா உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

மேலும் மழை விட்டபிறகும் லேசாக மழை தூறி கொண்டு இருந்ததால், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடியும், சிலர் மழையில் நனைந்தபடியும் சென்றனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம், ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், கீரனூர், அன்னவாசல், இலுப்பூர், திருமயம், கீரமங்கலம், அரிமளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:- புதுக்கோட்டை 6, கந்தர்வகோட்டை 6, திருமயம் 1, மீமிசல் 11.40, மணமேல்குடி 15, குடுமியான்மலை 14, பொன்னமராவதி 50.40, காரையூர் 105 மில்லி மீட்டர் ஆகும். அதிகபட்சமாக காரையூரில் 105 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக திருமயத்தில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

மேலும் செய்திகள்