இறந்த சிறுவனை பிழைக்க வைப்பதாக கூறிய ஆயுர்வேத டாக்டர்கள் 2 பேர் கைது

இறந்த சிறுவனை பிழைக்க வைப்பதாக கூறிய ஆயுர்வேத டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி கிராமமக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-16 22:16 GMT
நாக்பூர்,

கோண்டியா மாவட்டம் கோரேகாவ் தாலுகாவில் உள்ள கோதி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனை கடந்த ஞாயிற்றுக்கிழமை பாம்பு கடித்தது. இதையடுத்து அச்சிறுவன் அருகில் உள்ள கங்காபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவனது உடல் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இந்த நிலையில் பாலாகாத் பகுதியை சேர்ந்த நவீல் லில் என்பவர் உள்பட 2 ஆயுர்வேத மருத்துவர்கள், உயிரிழந்த சிறுவனை 24 மணி நேரத்துக்குள் மீண்டும் உயிர்ப்பிப்பதாக கூறியுள்ளனர்.

இதையறிந்த போலீசார் மூட நம்பிக்கையை ஊக்குவித்த குற்றத்திற்காக ஆயுர்வேத மருத்துவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு விரைந்தனர். அவர்கள் “ஆயுர்வேத மருத்துவர்களை விடுவிக்கவில்லை என்றால், சிறுவனை மரணத்தின் பிடியில் இருந்து காக்க முடியாது, எனவே அவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

ஆனால் போலீசார் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கோரேகாவ் போலீஸ் நிலையத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சிலர் வன்முறையிலும் இறங்கினர். அவர்கள் அங்குள்ள கோண்டியா- கோஹமாரா சாலையில் டயர்களை கொளுத்தி போட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் கூடுதல் போலீசாரை அங்கு குவித்து நிலைமையை கட்டிற்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்