ஓட்டேரியில் மளிகை கடைக்காரரிடம் வழிப்பறி; 3 பேர் கைது

ஓட்டேரியில் மளிகை கடைக்காரரிடம் செல்போனை பறித்துச்சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-17 23:00 GMT
திரு.வி.க.

சென்னை ஓட்டேரி கொசப்பேட்டையை சேர்ந்தவர் முகமது ரீகன்(வயது 23). இவர், புளியந்தோப்பு ஸ்டாரன்ஸ் சாலையில் சொந்தமாக மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். ஓட்டேரி குட்பட்பள்ளம், ரேஷன் கடை அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், முகமது ரீகனிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்று விட்டனர். இதுபற்றி அவர் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முகம்மது நாசர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலை மற்றும் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர். அதில் அவர்கள்தான் மளிகை கடைக்காரர் முகமது ரீகனிடம் செல்போன் பறித்தது தெரிந்தது. இதையடுத்து ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த அருண்குமார்(23), தீனா(19) மற்றும் புனித் ராஜ்(20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரையும் சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் மடக்கி பிடித்து கைது செய்த இன்ஸ்பெக்டர் முகமதுநாசர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலை ஆகியோரை புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி பாராட்டினார்.

மேலும் செய்திகள்