எடப்பாடி அருகே மண் கடத்திய டிப்பர் லாரி, டிராக்டர்கள் சிறைபிடிப்பு - மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு

எடப்பாடி அருகே மண் கடத்திய டிப்பர் லாரிகள், டிராக்டர்களை பொதுமக்கள் சிறைபிடித்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-17 22:45 GMT
எடப்பாடி,

எடப்பாடியை அடுத்த முப்பனூர் பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் அச்சம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் கிராவல் மண் அதிகளவில் உள்ளது. இந்த மண்ணை வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் டிப்பர் லாரி, டிராக்டர்களின் மூலம் பலரும் ஏரிக்கு வந்து அனுமதியின்றி எடுத்து செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அவ்வாறு மண் கடத்தி செல்லும் வாகனங்கள் அப்பகுதியில் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும் ஒரு சிலர் அனுமதி பெற்று மண் அள்ளினாலும், ஏரியின் ஒருபகுதியில் அள்ளாமல் வெவ்வேறு இடங்களில் ஏரிக்குள் அள்ளி ஆழமான குழிகளை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால் ஏரிக்கு மழைநீர் வரும் காலங்களில் ஆழமான குழிகளில் தண்ணீர் நிரம்பும்போது அதன் ஆழம் தெரியாமல் குழந்தைகள் இறங்கினால் உயிர் இழப்பு நேரும் என்பதால் ஏரிக்குள் யாரும் கிராவல் மண் எடுக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலரும் நேற்று ஒன்று கூடி ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் கடத்தலுக்காக மண் அள்ளிய டிராக்டர், டிப்பர் லாரிகளை ஏரியில் இருந்து வெளியே செல்லவிடாமல் சிறைபிடித்து வாகனங்கள் செல்லும் வழித்தடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அருகில் உள்ள சாலையில் தடுப்பை ஏற்படுத்தி அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மற்றும் அரசு பஸ்சை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த எடப்பாடி வருவாய் ஆய்வாளர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், கிராம நிர்வாக அலுவலர் சங்கிலி முத்து மற்றும் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்