வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - அதிகாரி தகவல்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-17 23:15 GMT
கிருஷ்ணகிரி,

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகை பெற்றிருந்தால் பதிவுதாரர்கள் இந்த அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை பெறக்கூடாது.

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பொதுப்பிரிவினர் மற்றும் ஆதிதிராவிடர்களை பொறுத்தவரை 30.9.2018-ந் தேதிக்குள் மேற்கண்ட கல்வி தகுதிகளை வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலமும், 30.9.2018-ந் தேதியின் நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்தமட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித்தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளாக இருத்தல் கூடாது. இந்த நிபந்தனை தொலை தூரக் கல்வி அல்லது அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்களுக்கு பொருந்தாது. மேற்கண்ட தகுதியுடையவர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் ஏற்கனவே உதவித்தொகை பெறும் பயனாளிகளில், ஓராண்டு முடிவுற்றவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித்தொகை வழங்கப்படும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்களுக்கு மீதமுள்ள காலாண்டிற்கான உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. வேலை வாய்ப்பகத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணம், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கான ஒப்புகைச்சீட்டு, வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை சமர்ப்பித்து, இந்த திட்டத்தின் கீழ் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்