போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓட்டம் - வண்டியுடன் கால்வாயில் விழுந்து மாடு பலி

போலீசாரை கண்டதும் மணல் கடத்தல் கும்பல் தப்பி ஓடினர். அவர்கள் வந்த மாட்டு வண்டி கால்வாயில் விழுந்து மாடு பலியானது.

Update: 2018-10-17 23:50 GMT
வேலூர்,

வேலூரை அடுத்த கருகம்புத்தூர், பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பாலாற்றில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் கடத்தப்படுகிறது. அங்கிருந்து வேலூருக்கும் மணல் கடத்தி வருகிறார்கள். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

ஆனாலும் தொடர்ந்து மணல் கடத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் கொணவட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 4 மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்துள்ளனர்.

போலீசாரை பார்த்ததும் மணல் கடத்தி வந்தவர்கள் வண்டிகளை வேகமாக ஓட்டிச்சென்றுள்ளனர். ஆனாலும் போலீசார் தொடர்ந்து விரட்டி வருவதை பார்த்து அவர்கள் வண்டிகளில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டனர். மாடுகள் வண்டியுடன் வேகமாக ஓடியது.

அப்போது அங்குள்ள கால்வாய் ஒன்றில் ஒருமாடு வண்டியுடன் தவறி விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அந்த மாடு பலியானது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன், இறந்த மாடு மீட்கப்பட்டது.

4 மாட்டு வண்டிகளையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் போலீசாரை கண்டதும் வண்டிகளை விட்டு விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்