சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி:சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் நடிகர் சரத்குமார் பேட்டி

சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

Update: 2018-10-20 22:45 GMT
தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, ‘தட்சண கங்கை‘ என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கைலாசநாத சுவாமி கோவில் படித்துறையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் நேற்று புனித நீராடினார். பின்னர் அவர், கைலாசநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒற்றுமைக்கு வழிவகுக்கும் வகையில், அனைத்து தரப்பினரும் சகோதர, சகோதரிகளாக புனித நீராடி வருகின்றனர்.

இங்கு சாலை வசதி, உடைமாற்றும் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இயற்கை வளங்களை பாதுகாப்பது மக்களின் கடமை ஆகும். அரசும் மக்களோடு இணைந்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். மதுபாட்டில்கள், பழைய ஆடைகள், பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை ஆற்றில் வீசக்கூடாது.

தாமிரபரணி மகா புஷ்கர விழாவை இறைவனுக்காக கொண்டாடுகிறோம். எனவே அரசு விழாவாக நடத்த தேவையில்லை. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுத்தாலே போதுமானது.

முன்பு சீமை கருவேல மரங்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்தது. தற்போது அதற்கு மதிப்பு இல்லாத நிலை உள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ய பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும். இதில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பானது பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட ஆகம விதிகளையும், நம்பிக்கையையும் உடைக்கின்ற வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், நெல்லை மாநகர செயலாளர் சேவியர், தூத்துக்குடி மாவட்ட அவை தலைவர் சங்கர், மத்திய மாவட்ட செயலாளர் வில்சன், நகர செயலாளர் அலெக்ஸ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்