மும்பையில் தத்து எடுக்கப்பட்ட சிறுவன் நெதர்லாந்து நாட்டின் போலீஸ் அதிகாரியாக உயர்ந்தார்

மும்பை டோங்கிரி காப்பகத்தில் தத்து எடுக்கப்பட்ட சிறுவன் இன்று நெதர்லாந்து நாட்டின் போலீஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார். அவர் பழைய நினைவுகளை மறக்காமல் டோங்கிரி காப்பக குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.

Update: 2018-10-20 23:30 GMT
மும்பை,

மும்பை அந்தேரியில் உள்ள புனித கேத்தரின் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து 6 வயதில் நெதர்லாந்து தம்பதியால் தத்து எடுக்கப்பட்டவர் ஜாமீல் மியுசென். தற்போது 42 வயதான அவர் நெதர்லாந்தில் போலீஸ் தலைமை கண்காணிப்பாளராக உள்ளார். இது இந்தியாவில் போலீஸ் கமிஷனர் அந்தஸ்து கொண்ட பதவியாகும்.

1974-ம் ஆண்டு மும்பையில் தனியாக சுற்றிக்கொண்டு இருந்த 3 வயது சிறுவன் ஜாமீல் மியுசெனை 2 போலீசார் மீட்டு டோங்கிரி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு 2 ஆண்டுகள் இருந்த அவர் அந்தேரியில் உள்ள புனித கேத்ரின் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அப்போது அங்கு இருந்த ஜாமீல் மியுசென், வெளிநாட்டு தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்டார்.

வெளிநாட்டில் காவல் துறையில் உயர்ந்த அதிகாரியாக இருந்தாலும் வளர்ந்த டோங்கிரி காப்பகத்தை ஜாமீல் மியுசென் மறக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் காப்பகத்திற்கு வந்து தனது பால்ய நினைவுகளை அசைப்போட்டு செல்கிறார். கடந்த வாரம் டோங்கிரி காப்பகம் வந்திருந்த போது அவர் கூறியதாவது:-

நெதர்லாந்து பெற்றோர் என்னை அவர்களது சொந்த பிள்ளையை போலவே வளர்த்தார்கள். எனக்கான எல்லா வாய்ப்புகளையும், அன்பையும் அவர்கள் தந்தார்கள். அவர்கள் எனக்கு கிடைத்தது என் பாக்கியம். டோங்கிரி காப்பகம் தான் என் இல்லம். இதன் அழகான சுற்றுச்சூழல் என்னை மிகவும் கவர்ந்து உள்ளது. இதனால் மீண்டும், மீண்டும் வருகிறேன்.

இந்த இல்லத்தில் எனக்கு நிறைய நினைவுகள் உள்ளன. இல்லத்தின் பிரதான நுழைவு வாயில் நெதர்லாந்தில் இருந்த போது என் நினைவில் வந்து செல்லும். இங்கு இருந்த கட்டிடம், பள்ளிக்கூடம், மலை மீதுள்ள விவசாய நிலம் என் மனதில் பசுமையான நினைவுகளாக உள்ளன.

இந்த இல்லத்தில் உள்ள எனது தம்பி, தங்கைகளுக்கு சிலவற்றை செய்ய வேண்டும் என நான் என் நண்பர்களுடன் வந்துள்ளேன். அதில் ஒரு பகுதியாக டோங்கிரி காப்பகத்தில் சமையல் அறை, சாப்பிடும் அறையை கட்டி வருகிறோம்.

காப்பக குழந்தைகளுக்காக இன்னும் பல பணிகளை செய்ய உள்ளோம். இங்குள்ள குழந்தைகள் எனது தம்பி, தங்கைகள். அவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டியது எனது கடமை. காப்பக குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காக பல முக்கிய நபர்களை சந்தித்து உள்ளேன்.

எனக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் கடினமாக உழைத்த பிறகே இந்த இடத்தை அடைந்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்