குடிநீர் வழங்கக்கோரி ஆழ்துளை கிணற்றுக்கு இறுதி சடங்கு செய்து கிராம மக்கள் போராட்டம்: விருத்தாசலம் அருகே பரபரப்பு

குடிநீர் வழங்கக்கோரி ஆழ்துளை கிணற்றுக்கு இறுதி சடங்கு செய்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-10-20 21:45 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே ராஜேந்திரப்பட்டினம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 3 மினிகுடிநீர் தொட்டிகள் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நல்ல முறையில் இயங்கி வந்த 5 குடிநீர் தொட்டிகளில் 4 குடிநீர் தொட்டிகள் முறையான பராமரிப்பு இன்றி சேதமடைந்தது. ஒரு சில ஆழ்துளை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மனுநீதிநாள் முகாமில் கலந்து கொண்ட கலெக்டரிடம் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.

இதையடுத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுக்க உதவும் மின்மோட்டாருக்கான மின் இணைப்பு பெறவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்கு இறுதி சடங்கு செய்து ஒப்பாரி போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை கிராம மக்கள் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு முன்பு திரண்ட னர். பின்னர் அவர்கள் இறந்தவர்களுக்கு செய்யும் இறுதி சடங்கு போல் தாங்கள் வாங்கி வந்த மாலையை ஆழ்துளைகிணற்றுக்கு அணிவித்தனர். பின்னர் பெண்கள் அனைவரும் ஆழ்துளை கிணற்றை சுற்றி அமர்ந்து தங்களுக்கு தடையின்றி தினந்தோறும் குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் குறைவு மற்றும் குடிநீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளாதால், கடந்த சில மாதங்களாக எங்களுக்கு போதிய குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீருக்காக வெகுதூரம் கால்கடுக்க நடந்து சென்று விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே செயல்படாமல் கிடக்கும் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து குடிநீர் வழங்கக்கோரி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க இந்த போராட்டத்தை நடத்தி உள்ளோம். இதன் பிறகும் குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்