பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு அஞ்சலி பாளையங்கோட்டையில் நடந்தது

பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு பாளையங்கோட்டையில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2018-10-21 23:00 GMT
1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி சீன ராணுவத்தினர் லடாக் என்ற இடத்தில் தாக்குதல் நடத்தினர். அப்போது மத்திய போலீஸ் பாதுகாப்பு படையினர் உயிர் இழந்தனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்தர் குமார் ரத்தோட், கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது 20 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நெல்லை டவுன் உதவி கமிஷனர்கள் கிருஷ்ணசாமி, நாகசங்கர், வடிவேல், எஸ்கால், தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்