ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது வெளியாகும்? நாமக்கல்லில் சத்தியநாராயணராவ் பேட்டி

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என நாமக்கல்லில் அவரது அண்ணன் சத்தியநாராயணராவ் கூறினார்.

Update: 2018-10-21 23:00 GMT
நாமக்கல்,

ரஜினி மக்கள் மன்ற புதிய மாவட்ட அலுவலகம் நாமக்கல்லில் உள்ள சேலம் சாலையில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய அலுவலகத்தை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது :-

ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். அவர் நண்பர்கள், உறவினர்களுடன் ஆலோசனை நடத்தி கொண்டு இருக்கிறார். புதிய கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் மாதத்தில் வெளியிடுவார். இல்லை எனில் அறிவிப்பு தேதி அப்போது தெரிவிக்கப்படும். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு பின்னணியில் பா.ஜ.க. இல்லை.

சபரிமலை அய்யப்பன் கோவில் வழிபாட்டில் சம்பிரதாயத்தை மாற்ற முடியாது. கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரீசிலனை செய்து, யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சார்பு அணி நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் அரங்கண்ணல் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரதீப் வரவேற்று பேசினார். விழாவில் சத்தியநாராயணராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சுமார் 350 பயனாளிகளுக்கு தையல் எந்திரம், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினார்.

இதில் மாநில அமைப்பு செயலாளர் இளவரசன், கிருஷ்ணகிரி மதியழகன், தர்மபுரி மகேந்திரன், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் நகர செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்