திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பு அரசு நிலங்களை மீட்க வேண்டும்; தி.மு.க. மனு

திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் தி.மு.க சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-10-22 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலைவாய்ப்பு, பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றுதல், வரத்துகால்வாய் சீரமைத்தல் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர்(பொறுப்பு) ராமபிரதீபன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் துணைச்செயலாளர் சேங்கைமாறன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:– திருப்புவனம் புதூர் பகுதியில் 2 ஏக்கர் 4சென்ட் இடமும், நெல்முடிக்கரையில் 4 ஏக்கர் 60 சென்ட் நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். இந்த இடத்திற்கு தனிநபருக்கு பட்டா வழங்கப்பட்டுஉள்ளது. அதன் மூலமாக அவர் நிலத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இது தொடர்பாக மதுரையில் உள்ள ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சிவக்குமார் விசாரணை நடத்தி இந்த இடத்திற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து இடத்தை கையகப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை அவருடைய உத்தரவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் திருப்புவனத்தை அடுத்த நெல்முடிக்கரை பகுதியில் 6 ஏக்கர் 87சென்ட் இடமும் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. அதையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீதாவிற்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் சக்திவேல் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:– சிவகங்கை மாவட்டம் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுஉள்ளது. இதில் திருப்புவனம் தாலுகா, மானாமதுரை மற்றும் இளையான்குடி தாலுகாவில் உள்ள சுமார் 40ஆயிரம் ஏக்கர் வைகை பாசன பகுதியாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியால் இந்த பகுதியில் உள்ள கிணறுகள் வறண்டு விட்டன. எனவே வைகை பாசன பகுதி கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்