புளியந்தோப்பு பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது

புளியந்தோப்பு பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-22 23:00 GMT
திரு.வி.க. நகர்

சென்னை புளியந்தோப்பு, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள் தொடர்ந்து திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் போலீசில் அடிக்கடி புகார் கொடுத்தனர். 

அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க புளியந்தோப்பு போலீஸ் துணை கமி‌ஷனர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையில் தலைமை காவலர்கள் தாமோதரன், ரமேஷ், குமரேசன் ஆகியோர் ஆட்டு தொட்டி அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

வாலிபர் பிடிபட்டார்

அப்போது அந்த பகுதியில் குடிபோதையில் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாலும், மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததாலும் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் புளியந்தோப்பு அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபர்ட்கென்னடி (வயது 35) என்பதும், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும், வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது. 

கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருந்து வந்த ராபர்ட்கென்னடி மது குடிக்க பணம் தேவைபட்டதால், இருசக்கர வாகனங்களை திருடி விற்க ஆரம்பித்துள்ளார்.  

8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் 

இருசக்கர வாகனங்களின் சில முக்கிய பாகங்களை மட்டும் தனியாக கழற்றி எடுத்துவிட்டு அதனை வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு சென்று விடுவார். இதே பாணியில் அவர் அம்பத்தூர், அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் ஏராளமான இருசக்கர வாகனங்களை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. 

தான் திருடிய நல்ல நிலையில் உள்ள சில இருசக்கர வாகனங்களை புளியந்தோப்பில் ஒரு மறைவான இடத்தில் திருடி மறைத்து வைத்திருப்பதாக ராபர்ட்கென்னடி போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், ராபர்ட்கென்னடியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்