கவர்னர் மீது தெரிவிக்கப்பட்ட உரிமை மீறல் புகார் குறித்து நடவடிக்கை என்ன? சபாநாயகரிடம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கேள்வி

கவர்னர் மீது தெரிவிக்கப்பட்ட உரிமை மீறல் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினார்கள்.

Update: 2018-10-22 23:30 GMT

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற பகுதியாக அறிவிக்கும் விழா கடந்த 2–ந்தேதி கம்பன் கலையரங்கில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசினார்.

அப்போது எழுந்த கவர்னர் கிரண்பெடி அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் பேச்சை நிறுத்துமாறு கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து பேசவே கவர்னர் கிரண்பெடி மைக் இணைப்பினை துண்டிக்க உத்தரவிட்டார். மேலும் விழா அரங்கினை விட்டு அன்பழகனை வெளியே போக சொன்னார்.

அப்போது கவர்னர் கிரண்பெடிக்கும், அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கும் இடையே மேடையில் பொதுமக்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் நடந்தது. இதைத்தொடர்ந்து 3–ந்தேதி கவர்னர் கிரண்பெடி மீது சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அன்பழகன் எம்.எல்.ஏ. உரிமை மீறல் புகார் கொடுத்தார்.

புகார் கொடுத்து 15 நாட்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று சபாநாயகர் அலுவலகத்துக்கு சென்று சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசினார்கள். அப்போது கவர்னர் மீதான புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு சபாநாயகர் வைத்திலிங்கம் புகார் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இன்னும் விரிவாக போதிய வீடியோ ஆதாரங்களுடன் புகார் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, ‘கவர்னருடன் சேர்ந்து காங்கிரஸ் அரசும் எங்களை புறக்கணிப்பதாக தெரிகிறது. எனது புகார் தொடர்பாக 3 நாளில் பதில் தராவிட்டால் கட்சி தலைமையிடம் அனுமதிபெற்று சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொள்வோம்’ என்றார்.

மேலும் செய்திகள்