ரெயில்வே பாலத்தில் ஆபத்தான பயணம் வெண்ணாற்றில் பாலம் கட்டப்படுமா? 40 ஆண்டு கால கனவு நனவாகுமா?

நீடாமங்கலம் அருகே ரெயில்வே பாலத்தில் கிராம மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். வெண்ணாற்றில் பாலம் கட்ட வேண்டும் என்பது கிராம மக்களின் கனவாக உள்ளது. இந்த கனவு நனவாகுமா? என்ற கேள்விக்கு அதிகாரிகள்தான் விடை அளிக்க வேண்டும்.

Update: 2018-10-23 22:30 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பழைய நீடாமங்கலம் கிராமம் உள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தின் வழியாக வெண்ணாறு செல்கிறது. வெண்ணாற்றின் குறுக்கே நீடாமங்கலம்-திருவாரூர் வழித்தடத்தில் ரெயில்வே பாலம் கட்டப்பட்டு உள்ளது. அதன் அருகே தஞ்சை-நாகை நெடுஞ்சாலையின் குறுக்காக வையகளத்தூர் ரெயில்வே கேட் உள்ளது.

வையகளத்தூர், ஒளிமதி, கப்பலுடையான், அன்பிற்குடையான், அரவூர், அரவத்தூர், கிளியூர், குச்சுப்பாளையம், மாணிக்கமங்கலம், அரசமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள், நீடாமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து வருகிறார்கள்.

இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல நாள்தோறும் ரெயில்வே பாலத்தை கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ரெயில்வே பாலத்தை நடந்தபடியும், சைக்கிளிலும் கடந்து செல்லும் மாணவ, மாணவிகளிடம் எப்போது ரெயில் வருமோ? என்ற அச்சம் இருப்பதை உணர முடிகிறது. அதேபோல் மளிகை கடைகள், மருத்துவமனைகளுக்கு செல்லவும் கிராம மக்கள் ரெயில்வே பாலத்தையே பயன்படுத்துகின்றனர்.

நெடுஞ்சாலை வழியாக நீடாமங்கலம் வர கூடுதல் நேரமாகும் என்பதால், வெண்ணாற்றில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே பாலம் கிராம மக்களுடைய அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விட்டது. பெரும்பாலும் சைக்கிளில் செல்பவர்களும், பாதசாரிகளும் இந்த ரெயில்வே பாலத்தை நீடாமங்கலம் நகருக்கு வர குறுக்கு வழிப்பாதையாக பயன்படுத்துகின்றனர். மோட்டார் சைக்கிள், கார் வைத்திருப்பவர்கள் மட்டுமே நீடாமங்கலத்துக்கு நெடுஞ்சாலை வழியாக செல்கிறார்கள்.

ரெயில்வே பாலத்தில் கிராம மக்களின் திக்...திக்... பயணம் கடந்த 40 ஆண்டுகளாக நீண்டு கொண்டே செல்கிறது. ஆபத்தை தவிர்க்க பழைய நீடாமங்கலத்தையும், வையகளத்தூர் நெடுஞ்சாலை பகுதியையும் இணைக்கும் வகையில் வெண்ணாற்றின் குறுக்கே பொதுமக்களின் போக்குவரத்துக்காக பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

ரெயில்வே பாலத்தின் அருகே வெண்ணாற்றின் குறுக்கே மக்கள் பயன்பாட்டுக்காக சிமெண்டு பாலம் கட்டினால் ரெயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வு காரணமாக பாலம் பழுதடைந்து விடும் என காரணம் காட்டி பாலம் கட்டுவதை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தட்டிக்கழித்து வருகிறார்கள்.

ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மூங்கில் பாலமும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. பெருகி வரும் மக்கள் தொகையையும், போக்குவரத்து நெருக்கடியையும், ஆபத்தான பயணத்தையும் கருத்தில் கொண்டு வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டி, கிராம மக் களின் கனவை நனவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதற்கு அதிகாரிகள்தான் விடை அளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்