பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த பிரமாண்ட மிதவை கப்பல்

பாம்பன் தூக்குப்பாலத்தை பிரமாண்ட மிதவை கப்பல் கடந்து சென்ற காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

Update: 2018-10-23 23:00 GMT
ராமேசுவரம்,

சென்னை காட்டுப்பள்ளியில் இருந்து 170 டன் எடை கொண்ட இழுவைக்கப்பல் ஒன்று, பிரமாண்ட மிதவைக் கப்பலை இழுத்தபடி மும்பை செல்வதற்காக புறப்பட்டது. அந்த கப்பல் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக, பாம்பன் துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக அங்குள்ள கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலம் நேற்று மதியம் 1 மணியளவில் ரெயில்வே பணியாளர்களால் திறக்கப்பட்டது. தொடர்ந்து வடக்கு கடல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இழுவைக் கப்பல், பெரிய மிதவைக்கப்பலை இழுத்தபடி தூக்குப் பாலத்தை மெதுவாக கடந்து சென்றது.

அப்போது நாகையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்காக 40 விசைப்படகுகளும், தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க 20 விசைப்படகுகளும் கடந்து சென்றன.

நேற்று ஒரே நேரத்தில் பெரிய கப்பல் மற்றும் ஏராளமான மீன்பிடி படகுகள் தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்