பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய மறுப்பு: கதிர்காமம் அரசு மருத்துவமனையை முன்னாள் எம்.எல்.ஏ. முற்றுகை

பெண்ணுக்கு முதுகுதண்டு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் மறுத்ததால், முன்னாள் எம்.எல்.ஏ. நேரு தலைமையில் கதிர்காமம் அரசு மருத்துவமனை முற்றுகையிடப்பட்டது.

Update: 2018-10-23 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள ஸ்கேன் எந்திரம் சரிவர செயல்படவில்லை எனவும், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் எந்திரங்களும் அடிக்கடி பழுதடைவதாக புகார்கள் கூறப்படுகிறது.

இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உரிய நேரத்தில் ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

இந்தநிலையில் முதுகு தண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செல்வி என்ற பெண்ணுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும், 10 நாட்கள் கழித்து வருமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது உறவினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. நேருவிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நேரு தனது ஆதரவாளர்களுடன் கதிர்காமம் அரசு மருத்துவமனையை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மருத்துவக்கல்லூரி இயக்குனர் கோவிந்தராஜ், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஏழுமலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த பெண்ணிற்கு ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்