திருமணமான 3 மாதத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை - உடல் பருமனாக இருந்ததால் விரக்தி?

உடல் பருமனாக இருந்ததால் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னசேலத்தில் திருமணமான 3 மாதத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-10-23 22:00 GMT
சின்னசேலம், 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் சிவன்கோவில் தெருவில் வசிப்பவர் சந்திரன். இவரது மனைவி ஜூட்மேரி (வயது 49). இவர்களுடைய மகள் மைக்கேல் ஜூபெர்னி(23). சந்திரன் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகவும், ஜூட்மேரி சின்னசேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மைக்கேல் ஜூபெர்னிக்கும் புதுச்சேரியை சேர்ந்த ராபர்ட் மகன் போரிஸ் ஜோ லடிக்கர் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. போரிஸ் ஜோ லடிக்கர் சின்னசேலம் வட்டார கல்வி அலுவலகத்தில் ஊழியராக உள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் சின்னசேலம் அண்ணாநகரில் வசித்து வந்தனர்.

மைக்கேல் ஜூபெர்னி உடல் பருமனாக இருந்ததால் திருமணத்திற்கு பின்பு மனமுடைந்த நிலையிலேயே காணப்பட்டார். நேற்று காலை அவர் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அப்போது சந்திரனும், ஜூட்மேரியும் வேலைக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் மைக்கேல் ஜூபெர்னி வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சந்திரனும், ஜூட்மேரியும் தூக்கில் பிணமாக தொங்கிய மைக்கேல் ஜூபெர்னியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மைக்கேல் ஜூபெர்னியின் உடலை பார்வையிட்டு அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜூட்மேரி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மைக்கேல் ஜூபெர்னிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால், அவரது தற்கொலை குறித்து கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்தும் விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்