டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழு, வீடுகளில் கண்டறிந்தால் அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை

வீடுகளில், டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழு கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2018-10-23 22:30 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் ஏடீஸ் வகை கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கொசுப்புழு உற்பத்தியை அழிப்பதற்காக களப்பணியாளர்கள் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் 30 பேர் வீதமும், பேரூராட்சிக்கு 10 பேர் வீதமும், நகராட்சிக்கு 5 ஆயிரம் மக்களுக்கு ஒருவர் வீதமும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வீடுகளுக்கு ஆய்வு செய்ய வரும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களான டயர்கள், உடைந்த மண்பாண்டங்கள், பூந்தொட்டிகள், தேங்காய் ஓடுகள், தேங்காய் சில்லைகள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பயனற்ற ஆட்டுக்கல், உரல் போன்றவற்றில் நீர் ஏதும் தேங்காத வண்ணம் அவற்றை அகற்றுவதோடு, வீட்டில் பயன்படுத்தப்படும் ஏர்கூலர், குளிர்சாதனப்பெட்டி மற்றும் புதிதாக வீடு கட்டும் இடங்களில் நீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் உள்ள நீரை வாரம் ஒருமுறை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நீண்டநாட்களாக பூட்டியிருக்கும் வீட்டையும் கண்காணித்து கொசு பெருக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்படி அனைத்து வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் ஆகியவற்றை இன்றைக்குள்(புதன்கிழமை) சுத்தம் செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் போது, வீடுகளிலாவது, கடைகள் மற்றும் திருமணமண்டபங்கள், வணிகவளாகங்கள் போன்றவற்றில் எங்காவது கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம் 1939-ன்படியும், மாவட்ட கலெக்டரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட சட்டப்பிரிவுகளின் படியும் அபராதமும், தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும் காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய, மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எந்த பகுதியிலாவது காய்ச்சலோ அல்லது நோய் பாதிப்போ ஏற்பட்டால் 04142-295134 என்ற தொலை பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் அன்பு செல்வன் கூறி உள்ளார்.

இதனிடையே வடலூர் பஸ் நிலையம், கழிவுநீர் வாய்க்கால், உழவர் சந்தை, எம்.ஜி.ஆர்.நகர், வீடுகளில் உள்ள தொட்டிகளில் ஏடிஸ் கொசுப்புழு உள்ளதா? என்று கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார். இதேபோல் குறிஞ்சிப்பாடியிலும் கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜகிருபாகரன், கடலூர் சப்-கலெக்டர் சரயூ, சுகாதார துணை இயக்குனர் கீதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், கடலூர் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலக தலைமை எழுத்தர் செந்தில், பேரூராட்சி செயல் அலுவலர்கள் வடலூர் பாலசுப்பிரமணியன், குறிஞ்சிப்பாடி சக்கரவர்த்தி, குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜயா, மாவட்ட மலேரியா அலுவலர் பழனிசாமி, பேரூராட்சி பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்