முல்லைப்பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட திட்டம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

முல்லைப்பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2018-10-24 22:00 GMT
தேனி, 

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. 5 மாவட்டங்களிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் பாசனம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரம் இந்த அணை.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தென்மாவட்டங்களில் நிலவிய பஞ்சத்தை போக்க இந்த அணை கட்டப்பட்டது. இதன்மூலம் வறண்ட நிலங்கள் முப்போகம் விளையும் பூமியானது. கேரள அரசு மின்சாரம் உற்பத்தி செய்து வருவாய் ஈட்டுவதற்காக இடுக்கி அணையை கட்டிய பின்னர், முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டை எழுப்பியது. இடுக்கி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதாக தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இருப்பினும் கேரள அரசின் தொடர் பிடிவாதத்தால் கடந்த 1979-ம் ஆண்டு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு அணையை பலப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது. பலப்படுத்தும் பணி முடிந்த பின்பு, நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரள அரசு முட்டுக்கட்டை போட்டது. பல்வேறு காரணங்களை கூறி, நீர்மட்ட உயர்வை தடுத்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனால், இந்த தீர்ப்பு நடைமுறைப்படுத்த முடியாத நிலை உருவானது. கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு தீவிரம் காட்டியது.

முல்லைப்பெரியாறு அணை அருகில் புதிய அணை கட்டிவிட்டு, பழைய அணையை அப்புறப்படுத்த கேரள அரசு திட்டம் தீட்டியது தமிழக விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடியது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அணையில் வல்லுனர்கள் குழு ஆய்வு நடத்தி அணை பலமாக இருப்பதாக ஆவணங்களை தாக்கல் செய்தது. இதையடுத்து நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் 2014-ம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் அந்த தீர்ப்பில், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு கொண்டு வந்த அவசர சட்டம் செல்லாது என்றும் கூறப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த அதே ஆண்டில் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

ஆனால், 152 அடியாக உயர்த்துவதற்கு பேபி அணையை பலப்படுத்த வேண்டும். பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என்றால் அதன் அருகில் உள்ள சுமார் 17 மரங்களை வெட்ட வேண்டும். அணைக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு சேதம் அடைந்துள்ள வல்லக்கடவு சாலையை சீரமைக்க வேண்டும். அணைக்கு மின்சார இணைப்பு பெற வேண்டும். இந்த 3 பணிகளும் முடங்கியே கிடக் கிறது.

பேபி அணை அருகில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இன்னும் அனுமதி வழங்கவில்லை. வல்லக்கடவு சாலையை சீரமைக்கவும் அனுமதி கிடைக்கவில்லை. கேரள மின்வாரியம், அணைக்கு மின் இணைப்பும் வழங்காமல் இழுத்தடிக்கிறது. இதுபோன்ற காரணங்களால் தீர்ப்பு வந்து 4 ஆண்டுகள் கடந்தும் பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் எதுவும் தொடங்காமல் உள்ளது.

இந்த தேக்க நிலையை கேரள அரசு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. அதன்படி, புதிய அணை கட்டுவதற்கு மீண்டும் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையை அணுகியுள்ளது. அதன்பேரில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இது, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை தொடங்க அனுமதி என்பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு அலைகளை கிளப்பி உள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும், பேபி அணையை பலப்படுத்துவதற்கான முட்டுக்கட்டைகளை தகர்த்து பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுதொடர்பாக பாலார்பட்டியை சேர்ந்த விவசாயி ஆண்டி கூறுகையில், ‘முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்ட பின்பு தான் எங்கள் ஊரும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊர்களும் செழிப்பாக மாறியது. அதற்கு முன்பு மக்கள் அன்றாட வாழ்வுக்கே திண்டாடினர். அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தாமல் இழுத்தடிப்பது என்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகம். புதிய அணை கட்டும் முடிவு என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பது போன்றது. எனவே, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். 152 அடியாக உயர்த்துவதற்கு உள்ள தடைகளை தகர்க்க கோர்ட்டு மூலம் தீர்வு காண வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தாவிட்டால், நாங்கள் மக்களை திரட்டி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குடியேறும் போராட்டங்களை நடத்துவோம். ஏற்கனவே எங்கள் கிராமத்தில் 2011-ம் ஆண்டு பல்லாயிரக்கணக் கான மக்கள் பங்கேற்புடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி இருந்தோம். இது எந்த அரசியல் சாயமும் இல்லாமல் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம். அதுபோன்ற போராட்டங்களை மீண்டும் தேனி மாவட்ட மக்கள் நடத்தும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது’ என்றார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் திருப்பதி வாசகன் கூறுகையில், ‘கேரள அரசு அணை கட்டுவது என்பது மின்சாரம் உற்பத்தி செய்து வருவாய் ஈட்டுவதற்காக தான். ஆனால், முல்லைப்பெரியாறு அணை 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம். புதிய அணை கட்டுவதற்கு ஆய்வுப் பணிகள் தொடங்கலாம் என்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அணை சம்பந்தமான பிரச்சினைகளில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மிகவும் மெத்தனமாகவே உள்ளனர். அணை பகுதியிலேயே அதிகாரிகள் தங்கி பணியாற்ற வேண்டும். அணை தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தமிழக அரசு கவனத்துக்கு கொண்டு செல்வது இல்லை. அணையில் பணியாற்றும் பொதுப்பணித்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தமிழக உரிமைகள் ஒவ்வொன்றாக விட்டுக் கொடுக் கப்பட்டு வருகின்றன. தற்போது அணையும் பறிபோகும் நிலையை உருவாக்கப் பார்க்கிறார்கள். எனவே, தமிழக அரசு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்