பணி ஓய்வு பணப்பலன்களை முறைப்படி வழங்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பணி ஓய்வு பணப்பலன்களை முறைப்படி வழங்கக்கோரி கொரடாச்சேரியில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-24 22:45 GMT
கொரடாச்சேரி,

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் மற்றும் ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்து நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.

2000-ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

2013-ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி குழு காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் வயதுடைய பணியாளர்களுக்கு முறைப்படியாக பணி ஓய்வு பணப்பலன்களை வழங்காமல் பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். பணி ஓய்வு பணப்பலன்களை முறைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கொரடாச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சங்கத்தின் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், முனியாண்டி, பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

மேலும் செய்திகள்