ஓசூரில்: தள்ளுவண்டி வியாபாரிகள் சாலைமறியல்

ஓசூரில் தள்ளுவண்டி வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-24 22:15 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 200 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்து வந்து நாள்தோறும் விற்பனை செய்து செல்கிறார்கள். இது தவிர, உழவர் சந்தைக்கு வெளியே 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் தெருவோரம் மற்றும் தள்ளுவண்டியில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்கிறார்கள்.

இந்தநிலையில் உழவர் சந்தையையொட்டி, காம்பவுண்டு சுவர் அமைக்க நிர்வாகத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

இதற்கு தெருவோர மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திடீரென நேற்று உழவர்சந்தை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, உழவர் சந்தையில் காம்பவுண்டு சுவர் அமைக்க கூடாது, அதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படும், தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று அவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து ஓசூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்