சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய எதிர்ப்பு: சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

சேலத்தில் சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர்.

Update: 2018-10-24 23:08 GMT
சேலம்,

சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் சின்னபுதூர், மிட்டாபுதூர், பெரிய புதூர், அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் யாரேனும் உயிரிழந்தால் தகனம் செய்யப்படுகிறது. சுடுகாட்டில் உடல்கள் தகனம் செய்யப்படுவதால், உடல்கள் எரியூட்டப்படும் போது கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சுடுகாட்டில் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதையறிந்து அங்கு வந்த அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மறியலுக்கு முயன்ற பொதுமக்கள் போலீசாரிடம் கூறுகையில், சுற்றியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஏதேனும் உயிரிழப்பு நடந்தால் எங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டில் தான் தகனம் செய்யப்படுகிறது. அப்போது டயர் மற்றும் பல்வேறு பொருட் களை எரியூட்டுவதால் புகை வெளியேறி குடியிருப்பு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்கிறது.

இதனால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் ஏராளமான நோய்தொற்று ஏற்படுகிறது. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே சுடுகாட்டில் சடலங்களை தகனம் செய்வதை விடுத்து, அடக்கம் செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைக்கேட்ட போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்