கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி 23 பேர் கைது

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-24 23:29 GMT
திருப்பூர்,

திருப்பூரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முகாமில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அடிப்படையாக கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டதாக பல்வேறு கட்சியினர், அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாவட்ட கிளை தலைமையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு வாசலில் உள்ள இரும்பு கேட் மூடப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதன்படி, நேற்று மாலையில் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு உள்ள திருமண மண்டப வளாகத்தில் கூடிய பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர், கொடிகளை கைகளில் ஏந்திக்கொண்டு, கோஷங்கள் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்கள் திடீரென போலீசார் பாதுகாப்பையும் மீறி மூடப்பட்டிருந்த கலெக்டர் அலுவலக வளாக இரும்பு கேட்டின் மீது ஏறி அதை தாண்டி உள்ளே சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

ஆனால் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிய போலீசார், அருகில் உள்ள திருமணம் மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 23 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்