18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்க தீர்ப்பு அ.தி.மு.க. விற்கு ஊதப்பட்ட சங்கு மன்னார்குடியில், திவாகரன் பேட்டி

18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் குறித்த தீர்ப்பு அ.தி.மு.க.விற்கு ஊதப்பட்ட சங்கு என மன்னார்குடியில், திவாகரன் கூறினார்.

Update: 2018-10-25 23:15 GMT
சுந்தரக்கோட்டை,

தினகரன் தன்னை ஒரு ‘மாஸ் லீடர்’ போல் காட்டிக்கொள்வதற்கா£க ஒரு கூட்டத்தை வைத்துகொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். தினகரனின் எதேச்சதிகார நடவடிக்கையை எல்லாருமே எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். தற்போது வெளிவந்துள்ள 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு ஊதப்பட்ட சங்கு.

ஜெயலலிதா தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வென்றெடுத்த 18 தொகுதிகளை அ.தி.மு.க இழந்து விட்டது. 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால் இந்த தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியால் நடக்கப்போகும் இந்த 18 தொகுதி தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.


இந்த தொகுதிகளை தற்போது இழந்திருப்பது தவறு. எல்லாவற்றிற்குமே பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கண்டிருக்கலாம். இந்த எம்.எல்.ஏக்கள் வழி தவறி சென்றிருக்கிறார்கள். யாரோ காட்டிய மாயவித்தையில் மயங்கி சென்று இருக்கிறார்கள். அவர்களை சமாதானம் செய்திருக்கலாம். இந்த 18 தொகுதி இழப்பானது அ.தி.மு.க கோட்டையை சிதறடித்து விடும். ஒட்டுமொத்தமாக இவர்கள் குடுமிப்பிடி சண்டை போட்டுகொண்டு அ.தி.மு.க வை சிதைக்கிறார்கள்.

டி.டி.வி தினகரன், தனது சொந்த ஆசையின் காரணமாக அ.தி.மு.க பொதுச்செயலாளரை சிறைக்கு அனுப்பியவர். 18 பேரிடமும் என்ன சொன்னார்? ஏது சொன்னார் என்று தெரியவில்லை. அவரை நம்பிச்சென்று இவர்கள் கழுத்தறுபட்டிருக்கிறார்கள். ஊரு ரெண்டுபட்டால் அடுத்தவர்களுக்குதான் வாழ்வு என்று கூறுவார்கள். அதுபோல வரப்போகும் 18 தொகுதி தேர்தல் பிறருக்கு ஒரு வாழ்வாக போய்விடப்போகிறது. ஆக, அ.தி.மு.க விற்கு மிகப்பெரிய ஆப்பு அடிக்கப்பட்டிருக்கிறது.


இன்று ஆண்டுகொண்டிருப்பவர்களும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தனிவண்டி ஓட்டிகொண்டிருப்பவர்களும் தான் இந்த ஆப்பை அடித்தவர்கள். இதற்கெல்லாம் இவர்கள்தான் மூல காரணம். ஒன்றரை ஆண்டுகளாக 18 தொகுதி மக்கள் எம்.எல்.ஏக்கள் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லவேண்டும். இனி 18 தொகுதிக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும்.

இது போன்ற சூழ்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திப்பது தான் நல்லது.மேல்முறையீடு செய்தால் மேலும் ஒரு வருடம் வழக்கு இழுத்துக்கொண்டு போகும். அதை விடுத்து தேர்தலை சந்திப்பது தான் சரியானது என்பது எனது கருத்து. மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மக்கள் தீர்ப்பிற்கு அப்பீல் கிடையாது. ஆதலால் நீதிமன்றம் சென்று காலவிரயம் செய்வதை விட மக்கள் மன்றம் செல்வதுதான் சரியானது.


இந்த அரசாங்கம், இந்த எம்.எல்.ஏக்கள் இவற்றை அழிப்பதற்கு தினகரனுக்கோ, எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கோ எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இனி நடக்கப்போகிற நிகழ்வுகளை பார்த்தால் இந்த 18 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட அ.தி.மு.க வெற்றி பெற போவது இல்லை. வருங்காலத்தில் சபாநாயகருக்கு அ.தி.மு.க.வை தவிர மற்றவர்களை சட்டசபையில் பதவி பிரமாணம் செய்து வைக்கிற சூழல் உருவாகும்.

 இவ்வாறு அவர் கூறினார். அப்போது அண்ணா திராவிடர் கழக நிர்வாகிகள் இளந்தமிழன், பாஸ்கர், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்