பெரவள்ளூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது உடந்தையாக இருந்த மெக்கானிக்கும் சிக்கினார்

பெரவள்ளூரில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிள் திருடியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த மெக்கானிக்கும் சிக்கினார்.

Update: 2018-10-25 21:45 GMT
சென்னை பெரவள்ளூரில் உள்ள பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் ரெயில் நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு ரெயிலில் பணிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த வாகன நிறுத்தும் இடத்தின் ஒரு பகுதி சாலையோரம் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளை திருட முயன்றார். உடனே அவரை பொதுமக்கள் பிடித்து பெரவள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்டவர், திருமுல்லைவாயல் சோழன் நகரை சேர்ந்த அசாருதீன் (வயது 25) என்பதும், இவர் ஏற்கனவே 3 மோட்டார் சைக்கிள்களை திருடி திரு முல்லைவாயலை சேர்ந்த மெக்கானிக் கனி (49) என்பவரிடம் கொடுத்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அசாருதீனையும், உடந்தையாக இருந்த கனியையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கனியிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்