வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேர் கைது 11 பவுன் நகைகள் மீட்பு

வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை தனிப்படையினர் கைது செய்து 11 பவுன் தங்க நகைகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-10-25 23:00 GMT
கரூர்,

கரூர் வெங்கமேடு அருகே உள்ள வெண்ணைமலையில் கடந்த ஜூலை மாதம் நடந்து சென்ற சங்கீதா என்பவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதேபோல் வெங்கமேடு அருகே உள்ள பஞ்சமாதேவி காமாட்சியம்மன் கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் முகமூடி அணிந்த மர்மநபர்கள் கோவில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தாலி சங்கிலியை திருடி சென்றனர். மேலும் கடந்த செப்டம்பர் மாதம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் அலுவலக ஊழியர் மனோகரன் என்பவரை பெரிச்சிபாளையம் ரெயில்வே தண்டவாளம் அருகே வழிமறித்த மர்மநபர்கள் அவர் வந்த காரை சேதப்படுத்தி, அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுகுறித்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் கரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், கரூர் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளான வாங்கலை சேர்ந்த சங்கர்(வயது 32), வேலுசாமிபுரத்தை சேர்ந்த முனியப்பன் மகன் வடிவேல் (என்கிற) தண்டபாணி(25), அருகம்பாளையத்தை சேர்ந்த அன்பழகன் மகன் லோகநாதன்(25), வெங்கமேட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுரேந்தர்(23), சங்கராம்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் பாராட்டினார்.

மேலும் செய்திகள்