3 வயது சிறுமியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

ஓசூர் அருகே 3 வயது சிறுமியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2018-10-25 23:00 GMT
கிருஷ்ணகிரி,

உத்தரபிரதேச மாநிலம் திரிபுவன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரத் என்கிற ராம்சூரத் (வயது 34). இதேபோல் அசாம் மாநிலம் பத்திசோடா கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவர்கள் இருவரும் குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள பட்டுவாரப்பள்ளி அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் ரோஜா தோட்டத்தில் தங்கி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் ராம்சூரத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணேசுக்கு மட்டும், ரோஜா தோட்டத்தின் உரிமையாளர் தொடர்ந்து வேலை கொடுத்து வந்தார். இதனால் ராம்சூரத்திற்கும், கணேசுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 7.11.2015 அன்று ராம்சூரத்துக்கும், கணேசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் பிறகு குடிபோதையில் இருந்த ராம்சூரத் கணேசின் மனைவி சுக்கரமணி (26), இவருடைய மகள் மைனா (3) ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த 2 பேரில், சிறுமி மைனா சிகிச்சை பலனின்றி இறந்தாள். இந்த கொலை தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்சூரத்தை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ராம்சூரத்திற்கு, சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், கொலை செய்யும் நோக்கத்தோடு சுக்கரமணியை தாக்கிய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனைவிதித்தும், இந்த தீர்ப்பை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார். இதையடுத்து ராம்சூரத்தை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்