சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

தேனியில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-10-26 22:15 GMT
தேனி,

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக் கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். உணவு தயாரிப்பு செலவின தொகையை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 9 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று முன்தினம் இரவிலும் அங்கேயே சத்துணவு ஊழியர்கள் தங்கினர். இரவு உணவையும் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். 2-வது நாளாக நேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்றைய உணவையும் போராட்ட களத்திலேயே அவர்கள் சாப்பிட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

மேலும் செய்திகள்